search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரளாவில் கம்யூனிஸ்டு ஆட்சி"

    அய்யப்பன் மீது கைவைத்ததால் கேரளாவில் கம்யூனிஸ்டு ஆட்சி முற்று பெறும் என்று பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் கூறியுள்ளார். #TamilisaiSoundararajan #Sabarimala

    நாகர்கோவில்:

    சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வருகிறது.

    கேரளா மட்டுமல்லாது தமிழகத்திலும் அய்யப்பபக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். குமரி மாவட்டம் அருமனையில் நேற்று ஆயிரக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற பெண்கள் சபரிமலைக்கு செல்ல மாட்டோம் என உறுதிமொழி எடுத்தனர்.

    போராட்டத்தில் தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:-

    இந்து சமய பாரம்பரிய கலாசாரம், பண்பாடு போன்றவற்றை பாதுகாப்பதில் பெண்களுக்கும் பங்கு உண்டு. சபரிமலையில் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்லக்கூடாது என்பது காலம், காலமாக பின்பற்றக்கூடிய முறையாகும். அதை நாங்கள் மீற மாட்டோம். சபரிமலைக்கு பெண்கள் செல்லக்கூடாது என்பது அறிவியலும், உடலியலும் சார்ந்ததாகும்.


    அரசியல் சட்டம் 25-வது பிரிவு மத நம்பிக்கைகளை காக்க வேண்டும் என்பதாகும். ஆனால் நீதிபதிகளின் தீர்ப்பு எதிர்மாறாக வந்துள்ளது. இது நமது பாரம்பரியத்தின் மீது விடுக்கப்பட்ட சவாலாகும்.

    சபரிமலைக்கு ஆதரவாக தீர்ப்பு கூறிய பெண் நீதிபதியின் கருத்து, மத நம்பிக்கை காப்பாற்றப்பட வேண்டும் என்பதாகும். பண்பாடு என்பது தான் இந்தியாவின் உயிர் மூச்சு. அதனை சிதைக்க எந்த இந்து குடும்பமும் தயாராகாது.

    கேரள கம்யூனிஸ்டு அரசும் திருந்தக்கூடிய காலம் வெகு தொலைவில் இல்லை. இந்து உணர்வுகளை மதிக்காத அரசியல் கட்சிகளுக்கு இந்துக்கள் வாக்களிக்க கூடாது.அய்யப்பனின் மேல் கை வைத்த கம்யூனிஸ்டு அத்தியாயம் மேற்குவங்கம், திரிபுரா போல் கேரளாவிலும் முடிவுக்கு வரும். காவி புரட்சி கம்யூனிஸ்டு புரட்சியை வீழ்த்திவிடும். அந்த உணர்வு அனைத்து மக்களிடமும் ஏற்பட்டுள்ளது.

    இந்து மதம் நல்ல பண்புகளை, பழக்க வழக்கங்களை சொல்லிக் கொடுக்கிறது. எங்கள் உரிமைகளிலும், வழிபாட்டு முறைகளிலும் யார் கை வைத்தாலும் அவர்களை சும்மா விடமாட்டோம்.

    பெண்களுக்கு அதிகம் வாய்ப்பு உள்ளது பாரதிய ஜனதாவில்தான். மத்தியில் முக்கிய துறைகளில் அமைச்சர்களாக பெண்களே உள்ளனர். கம்யூனிஸ்டு கட்சிகளால் இதை கூற முடியுமா? பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய மத்திய மந்திரி அக்பர் மீது கூறப்பட்டுள்ள புகாரில் உண்மை இருக்குமானால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அகில இந்திய தலைவர் அமித்ஷா கூறி உள்ளார். இதேபோல் வைரமுத்து மீது புகார் எழுந்தபோது தமிழ் நாட்டில் யாரும் கண்டு கொள்ளாமல் உள்ளனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் முத்து கிருஷ்ணன், கோட்ட பொறுப்பாளர் தர்மராஜ், மாநில உள்ளாட்சி பிரிவு செயலாளர் ஜெயசீலன், மாநில இந்து முன்னணி செயற்குழு உறுப்பினர் செல்லன், மாநில இந்து முன்னணி செயற்குழு உறுப்பினர் செல்லன், மாவட்ட ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி சுதர்சன் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர். #TamilisaiSoundararajan #Sabarimala

    ×